Sunday, July 21, 2013

தமிழ் திரை (Tamil Cinema) வாழுமா? - என் பார்வை

சமீபத்தில் செல்வராகவனின் தற்போதைய இயக்குனர்களின் தைரியத்தை பற்றிய காணொளியை (வீடியோ ) கண்டு கழிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  அந்த காணொளியை காண https://www.youtube.com/watch?v=177yL6YNMaw கிளிக்கவும். அந்த காணொளியில் செல்வராகவன்  தற்போதுள்ள இயக்குனர்களுக்கு தைரியம் இல்லை என்றும் இயக்குனர்கள் அவர்களின் சுய எல்லைக்குள் இருந்து வெளி வர வேண்டும் என்ற முக்கிய கூற்றை  குறிப்பிட்டு இருந்தார். செல்வராகவனின் வெளிப்படையான பேட்டி இந்த காணொளியை மேலும் சுவாரஸ்யமாக்கியது. மேலும் பல்வேறு முகநூல் (Facebook) ஆர்வலர்கள் அவர்களது முகநூல் பக்கத்தில் இந்த காணொளி பதிவை மற்றவர்களுக்கு பங்கிட்டு (share) அந்த பதிவில் நிறைய விமர்சனங்கள் பங்கு பெற்றும் வருகின்றன.


செல்வராகவன் என்ற தனி மனிதனின் இடத்தில்  இருந்து இந்த கூற்றை கவனிக்கும் பொழுது அது முற்றிலும் உண்மையாக தோன்றுகிறது. ஆனால் செல்வராகவனின் கூற்றுப்படி ஏன் நம் இயக்குனர்கள் தைரியம்  இழந்தார்கள்? உண்மையில் நம் இயக்குனர்கள் மட்டும் தான் குற்றவாளிகளா?

தயாரிப்பாளர்கள் தான் இயக்குனர்களின் தைரியத்தை முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள்! தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பதில் உள்ள பிரச்சனைகளையும், ஒரு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் வரை உள்ள பிரச்சனைகளையும், இந்த பிரச்சனைகள் எவ்வாறு தயாரிப்பாளரை தாக்குகிறது, அதன் மூலம் ஒரு இயக்குனர் எவ்வாறு அவரது தைரியத்தை நிலை நாட்டுகிறார் என்பதை அலசுவோம் வாருங்கள் !

தொழில்நுட்பத்தின் திரையரங்குகளின் மேலான ஆதிக்கம்:

------------------------------------------------------------------------------------
 முன்னரெல்லாம் திரை அரங்குகள் மட்டுமே திரைப்படத்தை பார்க்கும் சாதனங்களாக இருந்தன. அதனால் நல்ல படங்கள்  வருடக்கணக்கில் ஓடிய வரலாறையும் தமிழ் திரை பார்த்திருக்கிறது. ஒரு புது திரைப்படம் வெளியாகும் பட்சத்தில் திரையரங்கத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகவே சென்று, நாம் ஒரு புதிய படத்தை பார்த்து பரவசம் அடைய போகிறோம் என்ற மகிழ்ச்சியில் 2 மணி நேரம் வரிசையில் நின்று, பல தள்ளு முள்ளுகளையும் தாண்டி திரை சீட்டு (ticket ) வாங்கி, படம் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து ஆடி, மற்றவர்களிடம் அந்த படத்தை பற்றி மிக பெருமையாக பேசி சந்தோஷப் படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.  காலம் மாற, நாகரிகம் வளர, தொழில்நுட்பமானது உயர்தர அனுபவம் என்ற ஒன்றை உருவாக்கியது. இந்த உயர்தர அனுபவம் என்பது,
  1. நீங்கள் வரிசையில் காத்திருந்து சீட்டு வாங்குவதை தடுத்து, நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே நீங்கள் விரும்பும் திரைப்படத்திற்கு/திரையரங்கிற்கு சீட்டு பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகபடுத்தியது. ஆதலால் மக்களிடம் அமோக வரவேற்பை  பெற்றது.
  2. திரையரங்கங்களின் உள்கட்டமைப்பு (infrastructure) மிக அபரிதமாக மேன்மை பெற ஆரம்பித்தது
  3. திரையரங்குகளின் வாடிக்கையாளர் சேவை சிறப்படைந்தது.
  4. முன்னர் காலத்தை  போலில்லாமல் திரைப்படம் வெளியான 3 மணி நேரத்தில் மக்களின் புது திரைப்படத்தின் மீதான விமர்சனம் உலகெங்கும் (Facebook , Twitter) போய்  சேரும்படி தகவல் தொழில் நுட்பம் உலகை சுருக்கியுள்ளது. அதே சமயம், அப்படம் நம்மை திருப்தி படுத்தாவிட்டால் அப்படம் இணையத்தில் சுக்கு நூறாக கிளித்து தொங்கபடுவதையும் பார்க்கிறோம். ஆகவே படம் ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்சத்தில் அந்த பட குழுவினர் மிக விரைவில் நட்டமடையும் தருணத்தை சந்திக்கின்றனர்.

இவ்வாறாக தொழில் நுட்பம் வளர, திரையரங்கினர் மக்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய அதிக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கினர்.

திரை அரங்கு கட்டணம்:

------------------------------------
  •  நான் கல்லூரி படித்த போது  (2000-ஆண்டு) பின் சீட்டு ருபாய்  20  மற்றும் மேடை சீட்டு (balcony) 30 ரூபாய். திரை அரங்குகளும் வீட்டிற்கு  மிக அருகில் (அதிக பட்சம் 3 km) அமைந்திருக்கும் . இடைவேளையில் நொறுக்கு தீனிக்கு அதிக பட்சம் 20 ருபாய் செலவாகும்.  போக்குவரத்திற்கு  4 நபர்கள் கொண்ட ஒரு குடும்பம் ருபாய் 30 செலவிடும். ஆக ஒரு 4 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு அதிக பட்சம் 200 ரூபாய் செலவாகும் (தலைக்கு 50 ருபாய்)
  • புதிதாக வெளியிடப்படும் படத்திற்கு இன்றைய கால கட்டத்தில் இருக்கும் சவால்களை பார்ப்போமா ?
  1. நகர மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக நான்கு சக்கர வாகனங்கள் 30 மடங்கு பெருகி விட்டன. போக்குவரத்து இடைஞ்சல்கள் பெருகி விட்டன.
  2. திரை அரங்கிற்கு பயணம் செய்யும் தூரம்அதிகமாகிவிட்டது.
  3. திரை அரங்கிற்கு பயணம் செய்யும் நேரம் அதிகமாகிவிட்டது
  4. பயணத்திற்கு செய்யும் செலவு (எரிபொருள்)அதிகமாகிவிட்டது
  5. ஒரு திரை சீட்டிற்கான செலவு 4 மடங்கு அதிகமாகிவிட்டன.
  6. இடைவேளையில் தின்பண்டம் வாங்குவதற்கான செலவு 10 மடங்கு அதிகரித்து விட்டது
  7. திரை அரங்கத்தினர் வாகன நிறுத்தத்திற்கான இடத்தை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர் . இது நமது திரை சீட்டு கட்டணத்தில் ஈடு செய்யப்படும்.

மொத்தத்தில் 4 நபர் கொண்ட குடும்பம் ஒரு படம் பார்பதற்க்கு 1500 செலவிட வேண்டி இருக்கிறது.

இணையம் /திருட்டு தகடுகளின் (Pirated VCD) ஆதிக்கம் :
--------------------------------------------------------------------------------
  • காலம் மாறியது, தொழில்நுட்பம் பெருகியது , இணையம் வளர்ந்தது, அதன் முடிவாக உலகம் உள்ளங்கையில் சுருங்கியது ; கூடவே நம் பொறுமையும்.  இதை கண்ட சில வியாபாரிகள் மக்களின் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் இணையம் /தொழில்நுட்பத்தினை உபயோகப்படுத்தி தமிழ் திரையை நம் உள்ளங்கையில் கூடியவரையில் விரைவாக கொண்டு வந்தனர். இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் நான் ஒரு திரைப்படம் பார்க்க 300 ருபாய் செலவழிக்கும் தொகை திருட்டு  தகடில், வெறும் 40 ரூபாயில் முடிகிறது. இதை வைத்து நான் திருட்டு தகடில் மட்டும் படம் பார்ப்பவன் என்ற முடிவுக்கு வர வேண்டாம் :) )கூடவே இந்த வியாபாரிகள் கொள்ளை லாபத்தையும் தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சலையும் அதிகமாகவே சம்பாதிக்கின்றனர்.  
  • இணையத்தில் டொர்ரெண்ட் (Torrent ) மூலமாகவும் படம் வெளியான இரண்டே நாட்களில் புது படங்கள் மக்களை சென்றடைகின்றன 
  • இதை மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் வரை திரை தயாரிப்பாளர்கள் என்ன தான் குட்டி கரணம் அடித்தாலும் தடுக்க முடியாது .

பட வசூல்:
----------------
  • முன்னரெல்லாம் படம் ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும் செய்யா விட்டாலும் வசூல் குறைய சிறிது நாளாகும். அதற்குள் சிறிது நாள் ஆகிவிடும். ஆகையால் சுமாரான படம் கூட 50 நாட்கள் ஓடி விடும். தயாரிப்பாளருக்கும் திரை அரங்கு முதலாளிகளுக்கும் நட்ட விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடுவதே மிக அபூர்வமான நிகழ்வாக காணப்படுகிறது.

இயக்குனர்களின் கற்பனையின்மை/கதைபஞ்சம் :
-------------------------------------------------------------------------
  • ஒவ்வொரு இயக்குனரும் மக்கள் என்ன எதிர்பார்கிறார்கள் என்று அவரவர் சொந்த கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணமாக சுந்தர் c கருத்து சொல்வதை ஏற்று மக்கள் கொள்ள மாட்டார்கள் என்று என்றும் காமெடி படங்களாக எடுக்கிறார். மணிரத்தினம் நல்ல படம் என்பது தீவிரமான (serious and sensitive ) படங்கள் தான் என்று தீவிர படங்கள் எடுத்துக்  கொண்டிருக்கிறார். எப்பொழுது ஒரு படம் வெற்றி அடைகிறதோ அதே வகை படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. உதாரணமாக பருத்திவீரன் படம் வெற்றி அடைந்த பின் அதே வகையான, மதுரையை கதைக்களமாக கொண்ட படங்கள் வரிசை கட்டி கொண்டு வந்தன.

பட செலவு (Budget) :
----------------------------
  • முன்னரெல்லாம் படத்தின் மொத்த செலவு 1 கோடிக்குள் அடங்கி விடும். ஆனால் இப்பொழுது முன்னணி நாயகனை வைத்து படம் எடுக்க நாயகனுக்கு மட்டும் 5 கோடி தரவேண்டி உள்ளது. முன்னணி நாயகிக்கு 1 கோடி . ஆக மொத்தம் படத்தின் செலவு குறைந்த பட்சம் 10 முதல் 15 கோடியாவது ஆகிறது. கதாநாயகனுக்கு இவ்வளவு கோடிகள் கொட்டி எதற்காக படம் எடுக்க வேண்டும்? முன்னரே "பட வசூல்" பகுதியில் சொன்னது போல ஒரு படம் இரண்டு வாரம் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கும் பட்சத்தில் புதுமுக கதாநாயகனை வைத்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல படத்திற்கு முதல் கட்ட வசூல் செய்யவே 2 வாரம் ஆகிறது. அதற்குள் திரையரங்க முதலாளிகள் அடுத்த முன்னணி நாயகன்  படத்தை வெளியிட்டு விடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள்  நிலை :

--------------------------------------
  • முன்னரெல்லாம் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் நஷ்டமடையும் பட்சத்தில் அப்பட முன்னணி கதாநாயகன் அதே தயாரிப்பாளருக்கு மற்றொரு வெற்றி படத்தை பரஸ்பர புரிதலின் படி  (mutual understanding) இலவசமாகவே நடித்து கொடுப்பார். அதனால் அந்த தயாரிப்பாளர் தனது தயாரிப்பு பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள். ஆனால் இப்போதுள்ள கதாநாயகர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது. இதனால் புது தயாரிப்பாளர்கள் முதல் படத்தில் நஷ்டமடைந்து விட்டால் அவர் தெருவுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை.


இயக்குனர்களின் வேறுபட்ட/விதவிதமான பார்வை:
-----------------------------------------------------------------------------
  • எனக்கு தெரிந்த வரை நீங்கள் இரண்டு வகையான இயக்குனர்களை திரையுலகில் காணலாம். ஒன்று நல்ல படம் எடுப்பவர்கள். இன்னொன்று வணிக ரீதியிலான படங்கள் எடுப்பவர்கள். நல்ல படங்கள் எடுப்பவர்கள் அல்லது நடுநிலையாளர்கள் எப்பொழுதும் வணிக ரீதியிலான படம் எடுப்பவர்களே தமிழ் திரையின் அழிவுக்கு காரணம் என்று குறை கூறுவதை நிறைய பார்த்திருப்போம்.

  • இப்போது நமக்குள் எழும் ஒரு கேள்வி. எது நல்ல படம் (cinema)? எது நல்ல படம் இல்லை.

பொதுவாக இயக்குனர்களின் பார்வை இதில் வேறு வேறாக இருக்கிறது.

முதல் வகை:
சில இயக்குனர்கள் பார்வையானது "ஒரு ரசிகன் பல கஷ்டங்களுக்கு/மன உளைச்சலுக்கு இடையில் படம் பார்க்க வருகிறான். அவனை கருத்து சொல்கிறேன் என்று நாம் தீவிரமான படங்களை இயக்க கூடாது. மாறாக அவனுக்கு சந்தோசம் தரும் வகையில் காமெடி,ஆடல் , பாடல் காட்சிகளை வைத்து மகிழ்விக்க வேண்டும்" என இருக்கிறது. இதற்காக அவர்கள் வணிக ரீதியிலான காட்சிகளை வைத்து கதை அமைக்கின்றனர். இந்த வணிக ரீதியிலான காட்சிகள் முன்னணி கதாநாயகர்களையும் அதிக செலவுகளையும் வைக்கின்றது. இப்படிபட்ட வணிக ரீதியிலான படங்கள் வெற்றியடைந்தால் அதிக லாபத்தையும் தோல்வி அடைந்தால் அதிக நட்டத்தையும் ஏற்படுத்துகின்றன. வணிக ரீதியிலான படங்கள் எடுப்பதில் அதிக அபாயம் (Risk) இருந்தாலும், இந்த காரணத்தினால் தான் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கோடு இதில் ஈடுபடுகின்றனர். இந்த வகை இயக்குனர்களுக்கு மக்களுக்கு சந்தோஷம் தரும் எல்லா படங்களும் நல்ல படங்கள் தான்.
 

இரண்டாம் வகை:
இந்த வகை இயக்குனர்கள், அபாயம் இருந்தாலும் மக்களை நல்ல கதையோடு மகிழ்விக்க வேண்டும் என்று கதைக்கும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு முக்கியத்துவம் தந்து கதைக்களம்  அமைத்து படமெடுக்கின்றனர். இந்த வகை இயக்குனர்களே சில தோல்வி படங்கள் தந்தாலும் மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடிக்கின்றனர். இந்த வகை இயக்குனர்களுக்கு மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தும்  படங்கள் மட்டுமே நல்ல படங்கள். செல்வராகவனின் கருத்தை இந்த வகையோடு ஒப்பிட்டு கொள்ளலாம்.

இயக்குனரின் தைரியம்:
------------------------------------
மேலே சொன்ன அனைத்து இடர்களையும் தாண்டி தான் இன்றைய தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன்வருகிறார்கள் . ஆகவே அவர்களது முதல் நோக்கம் செலவு செய்யும் முதலை திருப்பி எடுப்பதில் தான் உள்ளது. அதற்கு அவர்கள் வணிக ரீதியிலான படங்களையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். இதனால் வணிக ரீதியிலான கதை வைத்திருக்கும் இயக்குனருக்கே முதலில் வாய்ப்பு கிடைக்கிறது.  எனவே எந்த இயக்குனரும் இந்த பொன்னான வாய்ப்பை தவற விட விரும்புவதில்லை. இந்த வணிக ரீதியிலான கதை செய்யும் இயக்குனரிடம் கட்டாயம் நல்ல தீவிர (serious) கதை இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாய்ப்பு என்பது வணிக ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களும் அவர்களுடைய கொள்கைகளை மாற்றி கொள்கிறார்கள். தயாரிப்பாளர்களின் முதலுக்கு உத்திரவாதம் கிடைக்கும் பட்சத்தில் எந்த தயாரிப்பாளரும் நல்ல கதையம்சமுள்ள படங்களை தயாரிப்பதில் எந்த பாரபட்சமும் காட்ட மாட்டார்கள் .


தமிழ் திரையுலகை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்:
----------------------------------------------------------------------------------
1. தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பு தரப்பு நடவடிக்கைகளை கண்காணித்து எந்த தயாரிப்பாளர்கள் எந்த இக்கட்டிலும் சிக்கி கொள்ளாமல் காக்க வேண்டும்
2. தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முன்னணி நடிகர்கள் /நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தை படத்தின் லாபம் மூலம் நிர்ணயிக்க வேண்டும்.
3. ஒரே நேரத்தில் பல படங்களை வெளியிடுவதை தடுக்க வேண்டும். படத்தின் வெற்றியை பொருத்து  அடுத்த படத்தை வெளியிடுவதை நிர்ணயிக்கலாம். முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கலாம்.
4. படம் வெளியான 1 அல்லது 2 வாரங்களுக்கு பிறகு DTH மூலமாகவும், DVD மூலமாகவும் வெளியிடுவதன் மூலம் திருட்டு தகடுகளுக்கு செல்லும் பணம் தயாரிப்பாளர்களுக்கு செல்லும் படி செய்யலாம்
5. தயாரிப்பாளர்களுக்காக தனி சேனல் (தமிழில் channel லுக்கு இணையான வார்த்தை என்ன? :(    ) அமைத்து படங்களின் முன்னோட்டம் வெளியிடலாம். இதில் விளம்பர வருமானத்தை வைத்து சேனல்-ஐ நடத்தலாம். இதிலே பட வெளியீட்டு காட்சிகளை ஒளி பரப்பலாம்
6. முக்கியமான விஷயம், ஒரு படத்தை வெளியிடுவதற்கு முன் படத்தின் செலவில் 75% தொகையை ஈட்டக்கூடிய உரிமம் தொடர்பான வழிகளை காண வேண்டும். உதாரணம், இசை உரிமை, தொலைகாட்சி உரிமை, வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை.....மற்றும் பல.
7. வெவ்வேறு திரை அரங்குக்கு செல்லும் ஒவ்வொரு படச்சுருள் தொகுப்பிலும் ஒவ்வொரு தனிப்பட்ட அடையாள என்னை அடிப்பகுதியில் பதிய வேண்டும் . இதன் மூலம் எந்த அரங்கில் திருட்டு தகடுக்கான நகல் எடுக்கபடுகிறது என்பதை கண்டு பிடிக்கலாம் .
8. மிக முக்கியமாக நல்ல திரைப்படங்களை எடுக்க இயக்குனர்கள் வர வேண்டும். அப்பொழுது தான் தயாரிப்பாளர்கள் வாழ முடியும்.




No comments: